இலட்சிய நாயகன் இயேசு

10 05 2007

அவையோருக்கு என் அன்பின் வணக்கங்கள். இலட்சியங்களற்ற வாழ்க்கை என்பது  இலக்கு இல்லாமல் பயணிக்கும் மாலுமியற்ற கப்பலைப் போன்றது.

இலட்சியங்களே மனித வாழ்வை அர்த்தப்படுத்துகின்றன. உயர்ந்த இலட்சியங்கள் மனிதனை வாழ்வின் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்வது போல கீழ்த்தரமான இலட்சியங்கள் மனிதனை அழிவுக்கும் கொண்டு செல்கின்றன.

உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டிருப்பவர்கள் நம் வாழ்வின் வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். நம்முடைய கிறிஸ்தவ வாழ்வை அர்த்தப்படுத்தவும், நமது பாதைகளைச் சீர்தூக்கிப் பார்க்கவும் நமக்கு முன்னால் நிற்கிறார் இலட்சிய நாயகன் இயேசு.

பிறந்தபின் இலட்சியங்களைக் கொண்டிருப்பதே மனித வாழ்க்கை. இலட்சியத்தோடு பிறந்தது இறைமகன் இயேசு ஒருவர் மட்டுமே.

விண்ணரசை மண்ணில் நிலைநாட்ட வேண்டும் என்னும் உயரிய இலட்சியமே இறைமகனின் பிறப்பு, இயேசுவின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் சீரான இலட்சியங்கள் அவருடைய பணிகளை வழிநடத்தியிருப்பதை அறியமுடியும்.

சரியான தயாரிப்பு இல்லாத இலட்சியப் பயணங்கள் தோல்வியில்  முடியும் என்பதை முப்பது ஆண்டுகால இயேசுவின் இலட்சியப் பணிக்கான தயாரிப்பு நமக்கு எடுத்துச் சொல்கிறது.

மனிதநேயத்தை மண்ணில் நிலை நாட்டவும், பழைய சட்டங்களின் துருப்பிடித்த பக்கங்களைத் துலக்கவும், ஏழைகளின் வாழ்வுக்காகவும், சக மனித முன்னேற்றத்துக்காகவும் நல்ல வழிகாட்டலைத் தரவும், இறுதியில் மனிதரின் பாவங்களைக் கழுவ மரத்தில் மரணமடையவும் இயேசுவின் பயணம் இருந்தது,

உறுதியான இலட்சியங்கள் தடைகளைத் தகர்க்கும் என்பதை இயேசு தனக்கு முன்னால் வந்த மூன்று சோதனைச் சபலங்களை முறியடித்ததன் மூலம் நமக்கு கற்றுத் தருகிறார்.

உணவு ஆசைக்காகவோ, பண ஆசைக்காகவோ, புகழ் ஆசைக்காகவோ அவர் தன்னுடைய இலட்சியங்களை விட்டுக் கொடுக்கவில்லை. போ அப்பாலே சாத்தானே என்று அவர் சோதனைகளை விரட்டியது போல நாமும் நம்முடைய உயரிய இலட்சியங்களுக்கு எதிரே வரும் சஞ்சலப் பேய்களை துரத்த வேண்டும்.

இலட்சியங்கள் துணிச்சலைத் தருகின்றன. எருசலேம் ஆலயத்தில், எதிரிகளின் பாசறையில் நின்று தனி மனிதனாக ஒரு போராட்டப் புயலாக இயேசு உருமாறியதற்குக் காரணம் அவருடைய இலட்சியத்தின் மீதான பிடிப்பு தான்.

மரணம் நிச்சயம் என்று தெரிந்திருந்தும் தவறுகளை நோக்கி விரல்நீட்டி எச்சரிக்க முடிந்த அவருடைய துணிச்சலும் மனதிடமும் நமக்கு நிச்சயம் வேண்டும்.

இயேசுவின் வாழ்க்கையின் ஒவ்வோர் பக்கமும் நமக்கு இலட்சியத்தின் தேவையையும், அதை எதிர்கொள்ள வேண்டிய வழிகளையும் நமக்குக் காண்பிக்கிறது.

நம்முடைய இலட்சியம் எதை நோக்கி இருக்க வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் எனும் வெறும் பணம் சார்ந்த இலட்சியங்களோ, அல்லது என்ன பதவியை அடைய வேண்டும் எனும் பதவி சார்ந்த இலட்சியங்களோ அல்லது அனைவரும் புகழும் ஒருவனாக வரவேண்டும் எனும் இலட்சியங்களோ தான் பெரும்பாலும் நமது வாழ்க்கையை ஆக்கிரமிக்கின்றன.

உண்மையில் நாம் கொண்டிருக்க வேண்டி இலட்சியம் இறைமகன் இயேசுவைப் போல நல்ல மனித நேயம் கொண்டவனாக வாழ்வேன் என்பதாக இருக்க வேண்டும்.

மனித நேயத்தை ஆழ்மனதில் இலட்சியமாகக் கொண்டுவிட்டால் நமக்கு மற்ற தேவைகள் எல்லாம் நிறைவு தரும் என்பதில் ஐயமில்லை.

உயரிய இலட்சியங்களை மனதில் ஏற்போம்
இலட்சியவாதி இயேசுவின் வழி நடப்போம்

என்று கூறி விடை பெறுகிறேன்

நன்றி வணக்கம்


 


செயல்கள்

தகவல்

மறுமொழியவும்

இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம் : <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>